மனிதன்


சில நூறு அணுக்கள் பிளந்து
பல கோடி உயிர்கள் உண்ணக்
குதிக்கும் குரங்கு..!

இருள்


இருமையின் தீ
தனிமையின் பந்தம்
அஸ்தமனத்தின் ஒளி

நள்ளிரவில் பூத்த நாசம்

பால் மனம் மாறாப் பச்சைக் குழந்தை
தாய் நாடு இதுவா எனத் தலைசாய - தன்
கால் கை எதுவென்று தேடும் தந்தைக்குத்
தெருவோர நாயும் இனித் துணையில்லை

பயிர் பல பேணும் தனித் தமிழ் தந்த பூமி
தளிர் ஏதும் மிஞ்சவும் வழி செய்யவில்லை
மலர் மஞ்சம் செய்து கடை பரப்பிய - காலம்
அனல் தஞ்சங் காட்டி உயிர் பூப் பறிக்கிறது

ஒன்றல்ல இரண்டல்ல ஈராயிரமுயிர்
ஒவ்வொன்றாய் ருசிக்கவும் மனமில்லை
உந்தன் அகோர வாயின் உள்ளே இன்னும்
எத்தனைப் பொல்லாத் தீர்வுத் திட்டங்கள்?

நாகதீபத்தின் நற்குடிகட்குத் திரிபிடகம்
போதிமரம் பெற்ற புத்தமதன் மெஞ்ஞானம்
இதுதான் தர்ம அசோக பாலன் மகிந்தன் சிந்தனை

சிங்களத் தீவின் உள்ளே மின்சாரச் சுடுகாடுகள்
புறத்தே தமிழனின் தமிழீழ மெகா சுடுகாடு
இதுவே தொடரும் இன்றைய மகிந்த சிந்தனை!

மலரும் 2009...?

அன்பெனும் கோயிலில்
அழகாய் உறங்கியே
அழுவதைக் கேட்கிறான்.
அமைதியே காக்கிறான்.

ஆண்டுகள் கடக்கின்றன.
ஆண்டவன் மௌனிப்புடன்
ஆதாமையே படைக்கிறான்
ஆப்பிள்கள் அழுகிவிட்டன.

இளமை கசக்கிறது
இல்லறம் துவர்க்கிறது
இல்லாமை இனிக்கிறது
இயலாமையே உறைகிறது

ஈக்கள் மொய்ப்பது உணவுக்கே
ஈன்றவள் நீயே மனம் படைத்தாய்
மாக்கள் மொய்ப்பது பணத்துக்கே
ஈசனீ இங்கு நீ பொய்த்தாய்

உண்மையும் பொய்யும் உன்வரவே
உள்ளத்தில் இருப்பது உன் கனலே
உலகம் போகிறது அழிவுக்கே
உந்தன் வரவு இனி உனக்கே

ஊக்கம் தரும் சூரியனே

ஊடல் தரும் வெண்ணிலவே
ஊகம் தரும் நல்லறிவே
ஊமையாகி விட்டதேன்?

எல்லாளன் எப்பவோ மடிந்திட்டான்
எல்லளவும் முன்னேற்றம் கிடையாது
எக்காளம் எப்போதும் செல்லாது
எதிர்காலம் குறி பார்க்கும் தப்பாது

ஏக்கங்கள் இனி வேண்டாம்
ஏமாற்றம் பட வேண்டாம்
ஏதாச்சும் பண்ண வேண்டாம்
ஏவாளைக் கொன்று விடு

ஐயங்கள் இருப்புக்கே
ஐயனே நம்பிடு
ஐந்துக்களாகிஅடைக்கலம்
அடர்ந்த வன்மோ?

ஒன்பதைக் கடந்தவனே
ஒய்யாரமாய் இருக்கிறாய்
ஒட்டகம் போல் தண்ணீரும்
ஒழுங்காய்ச் சேமிக்கும் வழி எது?

ஓட்டங்கள் தொடர்வதேன்?
ஓய்வின்றி அழுவதேன்?
ஓயாமல் தவிப்பதேன்?
ஓதுவது ஒழிப்பதேன்?

ஔவியமின்றி சொல்கிறோம்.
போராட்டம் பழகிவிட்டது
விடுதலை வேண்டுவது
உயிருக்கல்ல உரிமைக்கே

அறியாதவனல்ல நீ
அரும்பும் வருடம் கரும்பாய் இனிக்குமா சொல்?

எது வேண்டுமோ சொல்



வீணாக்கப்பட்ட நேர்மையை சேகரி
ஒவ்வொரு சின்னஞ்சிறு ஏமாற்றங்களையும் கையிலெடு
அழைக்கப் பட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் மேற்கோளிடு
உனக்கு எது வேண்டுமோ சொல்

தனியொரு மனிதனின் படையாக நட
தலைக்குள் தெரியும் நிழல்களைத் தாக்கு
உன் பழைய கணங்களிலிருந்து தப்பித்து வாழ்
உனக்குத் தேவையானது மட்டுமே உனக்கு உதவுவது
தெரியவில்லையா?
உனக்கு எது வேண்டுமோ சொல்

பயமின்றிக் கீழ்ப்படி
பயமின்றி ஆணையிடு
எதுவும் பேசாமல் திரும்பத் திரும்ப உளறுவதை
விட இறுதியில் அதிகம் பேசிடு
உனக்கு எது வேண்டுமோ சொல்

உனது கைகள் நடுங்கிடும் போதும்
உனது நம்பிக்கை உடைந்திடும் போதும்
உனது இமைகள் சரிந்திடும் போதும்
இதயத்தை அகலத் திறந்து வைத்திரு
ஏன்?
உனக்கு எது வேண்டுமோ சொல்